சமீபத்தில் தோழி ஒருத்தி மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டாள். ஏன் என்று நான் கேட்க, அவள் கூறியது “என் குடும்பத்தில் எங்களுக்கு பெரிதாக ஒன்றும் மரியாதை இல்லை. என்னை யாரும் என்ன என்று கூட கேட்பதில்லை. என் கணவரும், என் மன உளைச்சலை புரிந்துக்கொள்வதில்லை. அவர் என்னிடம் பாசமாக தான் இருக்கிறார். ஆயினும், அவர் வீட்டில் எங்களை வேற்றாளாக தான் பார்க்கிறார்கள். மாமனார், மாமியார்,நாத்தனார், அவள் கணவர், மச்சினர், ஓரகத்தி என்று பலரும் இருக்கின்றனர். அங்கு எது நடந்தாலும் யாரும் எங்களிடம் கூறுவதுக்கூட இல்லை. எந்த விசேஷங்களுக்கும் ஒரு மரியாதைக்கு கூட தெரிவிப்பதில்லை. இருப்பினும் இவரோ எதுவும் கேட்காமல், அழையா விருந்தாளியாக என்னையும் அழைத்து செல்கிறார். அது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. எனக்கென்று ஒரு சுயமரியாதை இல்லையே” என்று வருத்தத்துடன் கூறினாள்.
நான் அவளிடம், “நீ இதைப்பற்றி உன் கணவர் தவிர வேறு யாரிடமாவது பேசினாயா?” என்று வினவினேன். அவளோ “இல்லை” என்பது போல் தலையாட்டினாள். நான் அவளிடம், “மனதில் பட்டதை, சம்மந்த பட்ட தரப்பினரிடம் கேட்டு விடு. அவர்கள் அதை வேண்டுமென்றே செய்யவில்லை என்றால், இதோடு இப்பிரச்சினை முடிந்துவிடும். அவர்களும் புரிந்து கொண்டு இனி இவ்வாறு செய்ய மாட்டார்கள் ” என்றேன். அவளும் இதைக்கேட்டு அவர்களிடம் மனம் விட்டு பேசினாள். ஒரு மாதம் பின்னர், மீண்டும் அவளை சந்தித்தேன். மீண்டும் அதே வருத்தத்துடன் காணப்பட்டாள் . என்னிடம் கவலையோடு “பேசிய பின்னரும் அதே போல் தான் உள்ளார்கள். மீண்டும் வீட்டு சுபகாரியத்திற்கு கூட அழைக்கவில்லை” என்றாள். அவள் கணவரும் வருத்தத்துடன் உள்ளார் என்றும் கூறினாள் .
இவள் தான் நினைத்ததை கூறிய பின்னரும் அவர்கள் இவ்வாறு ஏன் நடந்து கொண்டார்கள் என்று எனக்கு புரியவில்லை. அப்படியென்றால், அவர்களுக்கு இவள் மனம் புண்படுகின்றது என்று கூட கவலை இல்லை என்றுதானே அர்த்தம். மேலும், இவளின் உறவும், இவள் கணவரது உறவும் வேண்டுமெனில், அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் அல்லவா ?
“மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்” என்று உலகநீதி கூறுகின்றது. அது உண்மை தானே. எவ்வளவு தான் விட்டுக்கொடுத்து சென்றாலும், தன் சுயமரியாதையை இழந்து, அழையா விருந்தாளியாக செல்லும்போது, மனம் எவ்வளவு வருத்தமடையும்? இதை ஏன் அவளின் கணவர் புரிந்து கொள்ளவில்லை?
அவரின் தமையன், தமக்கை தத்தம் துணை முன் அவரை விட்டுக்கொடுத்த போது, இவர் மட்டும் ஏன் இப்படி எதுவும் கேளாமல் இருக்கிறார்? இவரும் தன் மனைவியின் மன உளைச்சலை புரிந்துக்கொள்ளவில்லையோ? என்பது போல பல கேள்விகள் எனக்குள் எழும்பியது.
“உன்னை வேண்டுமென்று நினைக்காதவர்களை பற்றி எண்ணி, உன் மன நிம்மதியை நீ ஏன் இழக்கிறாய்? நீ வருத்தப்படுவது தெரிந்தும் அவர்கள் இவ்வாறு மீண்டும் செய்திருப்பது தவறு. தவறு செய்த அவர்கள், உன்னையோ, உன் கணவரையோ நினைத்து பார்த்தார்களா? தன் குடும்பம் என்று சுயநலமாக தானே இருக்கின்றனர். பின் நீ மட்டும் ஏன் உன் மன நிம்மதியை இழக்கின்றாய்? உன் கணவர், குழந்தைகள் என நீ உன் வாழ்கையை வாழ வேண்டியது தானே? வெளிப்படையாக உன் கணவரிடம் பேசு. உன் மாமனார், மாமியாரிடம் பேசு. அதுவும் ஒன்றும் பயனளிக்கவில்லை என்றால், அதோடு அவர்களை எண்ணுவதை விட்டு விடு.” என்றேன்.
இம்மாதிரியான நிகழ்வுகள் நாள்தோறும் எல்லோர் வாழ்விலும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஏன் என்று புரியாமல்,இவ்வாறு இருப்பதைவிட மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசினால் எல்லாமே சரியாகும். மாமியார் – மருமகள் – நாத்தனார் என்று கருத்து வேறுபாடு வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அதனை மனம் விட்டு பேசி சரி செய்ய முயல வேண்டும். அது பயனளிக்கவில்லை என்றால், அதனை விட்டுவிட்டு நகர வேண்டும். வேண்டாம் என்று நினைப்பவர்களை, பின் தொடர்ந்து சென்றால் ஒன்றும் பயனில்லை.
மேலும் கணவர் தான் கேட்க வேண்டும் என்றில்லை. அமைதியாக நம் மனதில் இருப்பதை நாமே நமக்காக பேசலாமே! எதை விட்டு கொடுத்தாலும், சுய மரியாதையை விட்டுக்கொடுக்காதே! உன்னை நீயே மதிக்கவில்லை என்றால், பிறர் எப்படி மதிப்பார்கள்? உன் மகிழ்ச்சி உன் கையில். உன் வாழ்கை உன் கையில். உன்னை, உன் விருப்பமின்றி யாராலும் புண்படுத்த முடியாது. பெண்கள் இதை புரிந்துக்கொண்டு, சுய மரியாதையோடு வாழ்வதே நல்லது.
