தினமும் மாலையில் வீட்டில் சாமி கும்பிடும் பழக்கம் எனக்குண்டு. பெரிதாக பூமாலை எல்லாம் போட்டு கற்பூரம் ஏற்றி கும்பிடாவிட்டாலும், என் தோழியுடன் பேசுவது போல, 5 நிமிடங்கள் சாமி முன்பு நின்று என் நாளை பற்றி எண்ணி என் குறை நிறைகளை முறையிடுவேன். அதே போல் தினமும் காலையில் “குறை ஒன்றும் இல்லை” பாடலுடன் தான் என் நாள் துவங்கும். அந்த பாடலை தான் தினமும் காலையில் office க்கு கிளம்பும் போது நான் பாடுவேன். பக்கத்துக்கு வீட்டுகாரர்கள் பயந்தாலும் சரி, வீட்டில் உள்ளவர்கள் ஓடினாலும் சரி நான் கவலை படுவதில்லை. நான் தொடர்ந்து 6-7 வருடங்களாக பாடும் பாடல் அது. இன்று Facebook இல் என் உயிர் தோழி துர்கா அந்த பாடலை Share செய்திருந்தாள். அடுத்த blog எதை பற்றி எழுதுவது என்று எண்ணியபடி துர்கா அனுப்பிருந்த link ஐ பார்த்து கொண்டிருந்தேன். அப்போது என் மனதில் சில எண்ணங்கள் உதித்தன. அந்த பாடலில் “குறை ஒன்றும் இல்லை கோவிந்தா” என்ற வரிகளை பாடும் போது மனதில் எண்ணற்ற சந்தோஷம் பிறக்கின்றது. அந்த பாடலை முதல் தடவை பாடும் போது எவ்வளவு உற்சாகம் இருந்ததோ அதே அளவு உற்சாகம் இன்றும் உள்ளது. அப்படி என்ன அந்த பாடலில் special ஆக உள்ளது என்று என் மனம் கேள்வி எழுப்பியது.
என் மனம் போகும் போக்கினில் சென்று யோசித்தேன். சில நாட்களில் மனது மிகுந்த கவலையுடன் இருக்கும். சில நாட்களில் மிகுந்த சந்தோஷம் இருக்கும். இதற்கெல்லாம் காரணம் என்ன? எல்லாம் நம் எண்ணத்தில் தான் உள்ளது என்ற உண்மை எனக்கு புரிந்தது. குறை ஒன்றும் இல்லை, குறை ஒன்றும் இல்லை என்று பாடப்பாட என் மனம் அதை ஏற்று கொள்கிறது. அதனால் தான் அந்த பாடலை நான் பாடியவுடன் என் மனம் சந்தோஷமாக உள்ளது. சிலர் எப்பொழுது பார்த்தாலும் கவலையுடன் காணப்படுவர். அதிலும் அவர்களை கேட்டால் “நான் ரொம்ப unlucky . கடவுள் ஏன் தான் என்னை இப்படி சோதிக்கிறாரோ” என்று கூறியப்படி அழுது தவிப்பார்கள். இயல்பில் உலகினில் இருக்கும் எல்லா உயிர்களுக்குமே சந்தோஷமாக வாழவே ஆசை. ஆனால் எல்லாரும் அவ்வளவு சந்தோஷமாக இருப்பதில்லை. என்னாயிற்று என்று கேட்டால் பலர் கூறுவது “என் வாழ்க்கை நான் எண்ணியபடி அமையவில்லை. நான் நினைத்த வேலை கிடைக்கவில்லை, நான் நினைத்த வசதி வாய்ப்பு கிடைக்கவில்லை, நான் நினைத்தவரை திருமணம் செய்ய முடியவில்லை” என்றே கூறுகின்றனர். உண்மை ஒன்றே ஒன்றுதான். நம் வாழ்கையை சந்தோஷமாக மாற்றுவதும் சோகமாக மாற்றுவதும் நாமே தானே தவிர வேறு யாரும் இல்லை. மேலே குறிப்பிட்ட அனைத்தும் கிடைத்தவனும் இன்னும் complaint தான் செய்கிறானே தவிர சந்தோஷமாக இருப்பது இல்லை.
இதற்கு என்ன தான் வழி என்று யோசித்தால் ஒரு தீர்வு தான் உள்ளது. எவனொருவன் “உலகிலேயே நான் தான் மிக்க ஆசீர்வதிக்கபட்டவன்” என்று கருதுகிறானோ அவனே உண்மையாகவே ஆசீர்வதிக்க பட்டவனாக சந்தோஷமாக இருப்பான். அவனுக்கே தன் வாழ்க்கை இனிமையானதாக திகழும். அவனை எந்த கடவுளாலும் சோதிக்க முடியாது. அவனுக்கு தெரியும் “நடக்கும் பாதையில் முட்கள் இல்லாமல் இருக்காது” என்று. அவனுக்கு தெரியும் “எல்லாமே இனிப்பாக இருந்தால் வாழ்க்கை திகட்டி விடும்” என்று. அவனுக்கு தெரியும் “நினைப்பது எல்லாம் கிடைப்பது வாழ்க்கை ஆகாது” என்று. அவனுக்கு தெரியும் “கிடைக்காததை நினைத்து அழுதழுது வாழ்கையை வீணடிப்பதை விட கிடைத்ததை வைத்து சிரிப்பது வாழ்கையை இனிமையாக்கும்” என்று.
உன் மனதிடம் கூறு “எனக்கு வாழ்க்கையில் கவலைகளே இல்லை” என்று. உன் மனதிடம் கூறு “என்னை போல் சந்தோஷமானவன் எவனுமில்லை” என்று. உன் மனதிடம் கூறு “என் வாழ்வில் நடக்கும் அனைத்தும் நல்லதிற்கே” என்று. உன் மனதிடம் கூறு “குறை ஒன்றும் இல்லை எனக்கு” என்று. நீயே உலகின் நாயகன். நீயே முழுமையான சந்தோஷத்தை என்னவென்று உணர்ந்தவன். நீயே ஆசீர்வதிக்கபட்டவன்.
இப்படி நினைத்து பார்க்கும் போதே வாழ்க்கை இனிக்கிறது அல்லவா?? இதை தினம் தினம் அனுபவித்தால் எவ்வளவு சுவைக்கும் வாழ்க்கை. ஆம்!! வாழ்க்கை இனிமையானது!!

