சூழலும் பழமொழிகளும்

Subha Thangaraj

Just a human | Explorer of Transformation | Aspiring coach | Senior Manager - all my writings and views are personal representation only

சூழலும் பழமொழிகளும்

agathin-alaku

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. இது பழமொழி மட்டுமின்றி, பழைய மொழி ஆகி விட்டது. என்றும் எல்லோரிடமும் அன்பாக பழகும் மக்கள், யோசிக்க வேண்டிய விடயமிது. எவரொருவர் உண்மையான அன்புடன் பழகுகிறார், எவரொருவர் உண்மையை விளம்புகிறார், எவரொருவர் அற நெறிகளை பின்பற்றுகிறார் என்று இக்காலத்தில் சொல்வதறிது.

இவ்வாறு ஒரு பழமொழியிருக்க, மற்றொன்று “வெளுத்ததெல்லாம் பால் அல்ல” என்கிறது. மேலும் “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்கிறது வேறொன்று. இது புரியாமல் நாமும் படித்து வந்தோம். இதற்கிடையே வேறொன்று யாவதெனில், “ரோஜா மலர் முட்களுக்கு இடையே வளரும்” என்பது.

pic3

இதற்கு ரோஜா மலர் முட்களுக்கு நடுவில், சிரமத்துடன் வாழ்கிறது என்பது விளக்கமா? அல்லது, ரோஜா பார்பதற்கு தான் அழகு, ஆனால் சுற்றிலும் முட்களுடையது என்றர்த்தமா?

இதையெல்லாம் சிந்திக்கும் போது, ஒவ்வொரு சூழ்நிலையும், நான் பழகி வந்த முகங்களும் தான் ஞாபகத்திற்கு வருகின்றன.

சிறுமியாக இருந்த போது, யாரிடமும் பேசாமல், கூச்ச சுபாவம் உடைய சிறுமியாக வளர்ந்தேன். யாரையாவது பார்த்தால், அம்மாவின் முந்தானை தான் என் குடையாகிவிடும்.

தூரத்து சொந்தமாக இருப்பினும், சென்னைக்கு யார் வந்தாலும் எங்கள் வீட்டில் தங்குவது தான் வழக்கம்.
சுருட்டு தாத்தா, அப்படிதான் அடிக்கடி வருவார். சிறுமி என்பதால், என்னை பார்த்து சிரிப்பார். நானும், ஒவ்வொரு முறையும் அவர் பொம்மை வாங்கி கொடுப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். ஒரு நாள், அம்மாவிடம் கேட்டேன் “அம்மா, அவர் பொம்மை வாங்கி கொடுக்க மாட்டாரா?” என்று. அம்மாவோ “எதற்கு” என்று கேட்க, நானோ “அவர் என்னை பார்த்து சிரிப்பார். அப்படியானால், அவருக்கு என்னை பிடிக்கும் தானே” என்றேன். அம்மா சிரித்தவண்ணம், “அப்படியெல்லாம் நினைக்க கூடாது. எதாவது வேண்டுமானால், அம்மாவிடம் கேள்” என்றார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆயினும் ஒவ்வொரு முறையும் அவர் பொம்மை கொடுப்பார் என்று நினைப்பேன். பலன் – ஏமாற்றம் தான் மிச்சம். இதுவாவது சிறுப்பிள்ளைத்தனம் என்று கூறுவேன்.

அடுத்தது பள்ளியில். யாரிடமும், அதிர்ந்து பேச தெரியாமல் இருந்த காலம். யாரேனும் என்னிடம் அதிர்ந்து பேசினால், பல நாட்கள் அதை எண்ணி வருந்துவேன். அவ்வாறிருக்க, ஆசிரியை ஒருவர் எல்லோருக்கும் ஒரு பகடை காய் போலிருந்தார். பலரும் கேலியும், கிண்டலும் செய்வதும், அவருக்கு ஒன்றும் பெரிதாக தெரியாது எனவும், அவர் பாடமெடுத்தால் உறக்கம் தான் வரும் என்றும் கூறுவர். முதல் நாளன்று அவர் எடுத்த “Degrees of comparison” இன்றும் யார் கேட்டாலும் சொல்லுவேன். இது ஏன், சமீபத்தில் என் வீட்டு பணிப்பெணின் மகளுக்கு, பத்தாம் வகுப்பு பரீட்சைக்கு நான் தான் ஆங்கிலம் கற்றுக்கொடுத்தேன்.

என்னுடைய முதல் கட்டுரையை, அந்த ஆசிரியை பாராட்டி எழுதியது வருமாறு:

Dear Child,
I honor your thinking and writing. The very thought of helping others made me feel amazing. I dedicate my knowledge and wisdom to your simplicity. God Bless!

அவர் தான் முதன்முதலில், என் ஆங்கில எழுதும் திறன் நன்றாக இருக்கிறது என்று கூறியவர். அதற்கு காரணமே அவர்தான். இன்னும் கேட்டால், அவர் கற்றுக்கொடுத்த ஒவ்வொரு இலக்கண, இலக்கியம் எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. அவரை எல்லோரும் தவறாக தான் நினைத்தார்களே தவிர, அவருடைய திறமையை யாரும் அறியவில்லை.

pic2

அடுத்தது கல்லூரி வாழ்கை. பலரும் நட்புடன் பேசுவது போல் தோன்றும். ஆயினும் இன்று தெரிகிறது, பலர் பகடைக்காயாக பயன் படுத்தியது. சிலர் மிக்க கண்டிப்பானவர்கள் போல தோன்றினார்கள். ஆயினும் அவர்களிடம் பழகும் போது தான் தெரிந்தது, அவர்கள் மிகுந்த அன்புடையவர்கள் என்று. அந்த நட்புதான் இன்றும் தொடர்கின்றது. இக்கட்டத்தில் தான் என் குணமும் மாற தொடங்கியது. அதுவரை பேச பயப்பட்ட நான், நினைப்பதை நினைத்தவாறு நேராக சொல்லிவிடுவேன்.

திருமணம் – அது வரை ஒரே சூழ்நிலையில் இருந்த எனக்கு, இது ஒரு பெரிய மாற்றம். எல்லோரும், எல்லோரிடமும் பாசமாக இருந்தார்கள். எல்லோரையும் வரவேற்பதும், நன்றாக உரையாடுவதுமாய் இருந்தார்கள். இப்படி யாரையும் பார்த்ததில்லை என்று நினைக்கும் அளவிற்கு எல்லோரும் இருந்தார்கள். ஆயினும் பின்பு தான் புரிந்தது, ஒருவருக்கொருவர் பிடிக்காமல், முகத்திற்கு நேராக மட்டுமே மக்கள் நன்றாக பேசுகிறார்கள் என்று. பல சூழ்நிலைகளில் தான் புரிந்து கொண்டேன், “அகத்தின் அழகு முகத்தில் மட்டுமின்றி சிரிப்பிலும் தெரியாது” என்று. பல்வேறு சூழ்நிலைகளில், நானே நேராக பேசுவதும் உபயோகமில்லை என்றும் இன்று புரிந்து கொண்டேன்.

pic4

எல்லாவற்றையும் விட, பழகிய சிலர் கூட உண்மையாக இல்லையே என்று எண்ணும் போது மனம் வலித்தது. பழமொழிகள் பலவற்றை பின்பற்றி, அற நெறிகளை அறிந்து, அகமொன்றும் புறமொன்றும் இல்லாமல் வாழ்ந்தவர்கள் அந்த காலத்தில் தானா என்று புலம்பினேன்.

என் மனம் “அந்த ஆசிரியை போல, பல நல்ல உள்ளங்கள், பலருக்கும் பிடிக்காதவர்களாய்  இருக்கின்றனர். பலரும் தன் பாடமெடுப்பது பற்றி விமர்சனம் செய்தாலும், அவர் நல்ல ஆசிரியையாகவே இருந்தார். அதே போல், எல்லோருக்கும் பிடிக்காவிட்டாலும், நேர்மையாக பேசுவதும், அகமும் புறமும் ஒரே மாதிரியாய் நீ இருப்பாயாக! உன் சந்ததியினரையும் அவ்வழியே நடத்துவாயாக” என்று என்னிடம் கூறியது.

என் கணவரின் தோழர் ஒருவர், எங்கள் வீட்டுக்கு வந்தார். என் மகளை பார்த்து சிரித்தார். அவர் சென்றதும், அவள் என்னிடம் “அம்மா, அந்த மாமா எனக்கு மிட்டாய் வாங்கிக்கொடுப்பாரா?” என்று கேட்க, எனக்கு சுருட்டு தாத்தா தான் ஞாபகத்திற்கு வந்தார். நம்மை பார்த்து சிரித்தால், நம்மை அவருக்கு பிடிக்கும் என்றில்லை என்பதை நானே இன்று தான் உணர்கிறேன். இந்த பதிவீடுகளை என்றாவது ஒரு நாள், என் மகளும் படிப்பாள் என்று எண்ணி சிரித்து கொண்டேன்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியாவிட்டாலும், போலியாக இல்லாமல், உண்மையாய் இருப்போம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top