அத்தை மடி மெத்தையடி!!

Subha Thangaraj

Just a human | Explorer of Transformation | Aspiring coach | Senior Manager - all my writings and views are personal representation only

sis

என் அப்பாதான் அவர் வீட்டில் கடைக்குட்டி. அவருடைய கடைசி மகளான நான் தான் எங்கள் வீட்டின் கடைசி பேத்தி. அப்பாவின் அக்காளான எங்கள் அத்தை , எங்கள் சிறு வயதில் எங்கள் வீட்டிற்கு பக்கத்து தெருவில் வசித்து வந்தார்கள். எங்களை அக்கறையுடனும் பாசத்துடனும் கவனித்து வந்தார்கள். பின்பு மதுரைக்கு சென்றுவிட்டார்கள். என்றாலும் நாங்கள் ஊருக்கு செல்லும்போதெல்லாம் பாசத்துடன் எங்களை கவனிப்பார்கள். எங்களுடன் மட்டுமின்றி எங்கள் ஊரிலுள்ள பெரியப்பா பிள்ளைகளுடனும் அவ்வாறே நடந்துக்கொள்வார்கள். அப்பாவும் அப்படித்தான். இன்றுவரை அத்தை மேல் அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். அப்போதெல்லாம் வியப்படைவேன். அத்தை ஏன் தன் பிள்ளைகள் மேல் பாசமாக இருப்பதை போல் எங்கள் மேல் பாசமாக இருக்கிறார்கள் என்று!! இன்று கிடைத்துவிட்டது அதற்கான விடை.

கனிஷ்கா – எங்கள் வீட்டின் இப்போதைய கடைக்குட்டி. என்னன்பு அண்ணனின் செல்ல மகள். பிறந்து ஆறு மாதங்களே ஆனாலும், நாங்கள் நான்கே முறைதான் பார்த்தாலும், அவளின் சிரிப்பும், பார்வையும் மனதில் நேற்று பார்த்தது போன்று தோன்றுகின்றது. அண்ணனை நான் குழந்தையாக பார்த்ததில்லை என்ற குறையை தீர்க்கும் வகையில் அண்ணனை போன்றே இருக்கிறாள். ஒவ்வொரு முறையும் அவளின் முகத்தை பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இத்தகைய பாசம் எங்கிருந்து வருகின்றது? அண்ணன் மேல் உள்ள பாசம்தான் இப்படி மாறியிருக்கிறதோ??

அண்ணன் மகள் மேல்தான் இப்படி ஆசையுள்ளது என்றால், அக்கா மகள்மேல் கேட்கவா வேண்டும்?? என் மகள் மேல் உள்ள பாசம் எள்ளளவும் குறையாமல் உள்ளது அவள் மேல். ஒவ்வொரு நாளும் அவளுடன் பேசுகையில் மனத்திலும் முகத்திலும் புன்னகை ஒட்டி கொள்ளும். அதிலும் என் மகளும், என் அக்கா மகளும் ஒன்றாகவே வளர்ந்தவர்கள் ஆயிற்றே!! அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் பாசம் வியக்க வைக்கின்றது!! இதற்கு இந்த உலகில் ஈடு இணை எதுவுமில்லை!!

திருமணத்திற்கு முன்னால் ஒரே வீட்டில் செல்ல சண்டைகளுடனும், எண்ணற்ற மகிழ்ச்சியுடனும் இருக்கும் ஒவ்வொரு தமக்கையும் தமையனும், திருமணத்திற்கு பின் வெவ்வேறு குடும்பமாக மாறினாலும், இம்மழலை செல்வங்கள் இந்த பந்தத்தை மெருகேற்றி இன்னும் அழகு சேர்க்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல!! பணம், பதவி, அந்தஸ்து இவையாவையும் அடித்து உடைத்தெறியும் சக்தி பாசத்திற்கு மட்டும் தான் இருக்கின்றது. இதை அறியாதவர்கள் நம்மை மூடர் என்று சொல்லிக்கொள்வர். ஆனால் இதை அறியாதவரே உண்மையான மூடர்கள்!!

“அத்தை மடி மெத்தையடி” என்பது உண்மைதானே 🙂

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top