அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே; அம்மாவை வணங்காது உயர்வில்லையே!!
நானாக நானில்லை தாயே, நல்வாழ்வு தந்தாயே நீயே!!
வேர் இல்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நட்டாயே!!
என்று பல முன்னணி நட்சத்திரங்கள் பாடியப் பாடல்கள், மிகவும் பிரபலமாக பேசப்பட்டவை. ஒவ்வொரு மனிதனுக்கும் தாய் என்பவள், மிகவும் மதிப்பிற்குரியவளாக தெரிகிறாள். அப்படி நினைக்காதவன், மனிதனே இல்லை என்று புராணங்கள் கூறுகின்றன. இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, நம் நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியானால், இவை எல்லாம் பாடல் வரிகள் மட்டுமாகவே இருக்க தகுதி பெற்றவையா? இதை பற்றி பலரும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். பெற்ற தாயையே மதிக்காதவன், எப்படி தாய் மொழியை மட்டும் மதிக்கப்போகிறான்?
தாய் மொழி என்று எதனால் கூறுகின்றோம்? குழந்தை தன் தாயை தான் முதலில் அடையாளம் கண்டுக்கொள்கிறது. ஒரு தாய், தன் பிள்ளைகளுக்கு, பலவற்றையும் கற்று கொடுக்கும் ஆசானாக திகழ்கிறாள். அதே போல், தாய் மொழி தான், நாம் கற்று கொள்ளும் முதல் மொழி. அம்மொழியில் தான், சொற்கள், வரிகள், அர்த்தங்கள் எல்லாம் ஒருவனுடைய மூளையை சென்றடைகின்றது. வளர வளர, ஒருவன் பல மொழிகளில் வல்லவனாக திகழ்ந்தாலும், அவனுடைய மூளை கூறுகளில் அவனுடைய தாய் மொழியே, பதிந்திருக்கும். இதனுடைய சான்று தான், அவன் பிற மொழிகளில் எழுதும் போது ஏற்படும், இலக்கணப் பிழைகள்.
படிப்பு, வேலை, ஆகிய பல்வேறு காரணங்களால், பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். பல்வேறு தரப்பான மக்களிடம் உரையாட வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படத்தான் செய்கின்றன. நாமும், பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்கிறோம். அதெல்லாம் ஒன்றும் தவறில்லை. நம் தாய் மொழி தெரியாதவருடன் பேசுவதற்கு தான், வேறு மொழிகளை பயன்படுத்த வேண்டுமே அன்றி நம்மவரிடமே தமிழில் பேசக்கூடாது என்றிருப்பது தவறல்லவா?
சரி, அதை கூட விட்டுவிடுவோம். நம் பிள்ளைகளுக்கே, நம் தாய் மொழியை கற்றுக்கொடுக்கவும், அவர்களுடன் தாய் மொழியில் பேசுவதையும், இழுக்கு என்று நினைப்போர் நம் மத்தியில் இருக்க தானே செய்கின்றனர்? அவர்களை என்னவென்று கூறுவது? அப்படிப்பட்டவர்களை பார்க்கும் போது, மனம் வேதனை அடைகின்றது. நம் பிள்ளைகளுடன், அண்டைய மொழிகளை பேசுவது, வேறு ஒருவரை தாய் என்று அழைக்க சொல்வதற்கு சமம்.
நண்பர் ஒருவருடைய மனைவி, தமிழில் வல்லவர் அல்ல. வேறு ஊரில் பிறந்து வளர்ந்தவர். ஆயினும், அவருடன் சேர்ந்து தமிழ் கற்றுக்கொண்டு, முதலில் எழுத்துக்கூட்டி படித்து, இப்பொழுது நன்றாகவே படிப்பதை பார்த்தால், மகிழ்ச்சியாக இருக்கின்றது. இப்படிப்பட்டவர்களும் இருக்க தான் செய்கின்றனர். அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்!
பிள்ளைகள் எப்படியும், ஆங்கிலமும், வேறு மொழிகளும் கற்றுக்கொள்ளதான் போகிறார்கள். அப்படி இருக்கும் போது, எதற்காக இந்த அவசரம்? எதற்காக, குழந்தை பருவத்திலிருந்து, வேறு மொழிகளை திணிக்க வேண்டும்? தாயை அடையாளம் காணத்தெரியாத பிள்ளைகள், அத்தைகளை அடையாளம் காண்பதை பாராட்டுவீர்களா?? அதற்கு பெற்றோரே காரணமாக இருக்கலாமா?? நாகரிகம் என்ற பெயரில், தாய், தகப்பனை “அம்மா, அப்பா” என்று அழைப்பது கூட இழுக்கு என்று பலரும் நினைக்கும் அளவுக்கு நம் சமுதாயம் கெட்டுவிட்டது. இதை பார்க்கும் போதும், கேட்கும் போதும், மனது வேதனை அடைகின்றது.
இந்திக்காரர்களை பார்த்திருக்கிறீர்களா?? அவர்களிடம் தனக்கே உரிய ஒரு பெருமை இருக்கும். தங்கள் மொழி தான் தேசிய மொழி என்று பெருமையாக இருப்பார்கள். அது உண்மையாக இல்லாவிட்டாலும் கூட. மேலும் இந்தி தெரியாதவர்களை, ஏதோ கேவலமாக பார்ப்பர். அம்மொழி தெரியாது என்பதற்காக நாம் கேவல பட வேண்டியதில்லை. அவர்கள், தத்தம் மொழிகளில் வல்லவர்களாக இருக்கின்றனர். நாமும், நம் மொழியில் வல்லவர்கள் என்று பெருமிதம் கொள்ளலாமே! அதை செய்ய நம்மவரே கேவலப்படும் போது, நம்முடன் சேர்ந்து நம் தாய் மொழியுமல்லவா தலை குனியும் நிலை ஏற்படுகின்றது??
எனக்கு ஆங்கிலம் நன்றாகவே தெரியும். அதை வேண்டிய இடத்தில் மட்டுமே நான் பயன்படுத்துவேன். என் மகளுடன் தமிழில் மட்டுமே வீட்டில் பேசுவேன். பெங்களூரில் வாழ்வதால், என் மகளுக்கு தாய் மொழி தெரியாமல் அவள் வளர கூடாது என்று நினைப்பவள் நான். பள்ளியில், தமிழ் கற்கும் வாய்ப்பு இல்லாததால், தாயாகிய நான் தானே தாய் மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும்?
இக்காலத்தில், நாம் ஒன்றும் இலக்கண இலக்கியத்துக்கு உட்பட்ட செந்தமிழை பேசுவதில்லை. பேசுவது, பல்வேறு ஊர்களின் பேச்சு வழக்கு தான். அதுவும் இல்லாமல் போய்விடுமோ என்று நினைக்கும் போது, ஒரு வித அச்சம் ஏற்படுகின்றது. மேலை நாட்டவர் கூட, நம் மொழியின் பெருமைகளை அறிந்தவர்களாக இருக்கின்றனர். ரஷ்யாவில், “Grand Kremlin palace” உள்ளது. அங்கு கூட “கிரெம்லின் மாளிகை” என்று தமிழில் எழுதப்பட்டுள்ளது. அங்கு அந்த மாளிகையின் பெயர், ஆங்கிலம், ரஷ்ய, சீன மொழிகளில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. அதோடு, நம் மொழியிலும் எழுதப்பட்டிருப்பது நமக்கு பெருமை இல்லையா?
சமீபத்தில், பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தேன். ஒரு ஜெர்மனிய பெண்மணி என் அருகில் அமர்ந்திருந்தார். அவர், நான் எந்த ஊரில் இருந்து வருகிறேன் என்று கேட்டார். சென்னை என்றவுடன், “தமிழ் பேசும் ஊரா?” என்று கேட்டார். அதோடு நிற்காமல், “திருக்குறள் எழுதப்பட்டது தமிழில் தானே?” என்று கேட்டார். மேலும், “பழைய மொழி. இலக்கண, இலக்கிய வளம் பெற்ற சிறப்பான மொழி” என்று பாராட்டினார். இதை கேட்ட போது, என் மனதடைந்த பூரிப்பை என்னால் விளக்க முடியவில்லை.
பண்டைய மொழியான, நம் தாயை நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. அவளை முதியோர் இல்லத்தில் தள்ளி, அவள் இறப்பதற்கு நாமே காரணமாக வேண்டாமே! தாயை கேவலமாக நினைக்காதீர்.. வீட்டில் பிள்ளைகளுக்கு, நம் தாயை அடையாளம் காட்டுங்கள். நம்மால் முடிந்தவரையாவது, அவளை காப்பாற்றுவோமே தோழர்களே!!



